அர்ச்சனாவின் அன்பை வென்றுவிட்டதா ஆரியின் நேர்மை – பிக்பாஸ் 4 விமர்சனப் பார்வை


மனிதர்களுக்கிடையிலான உறவுகளை பொருள்களுக்கிடையிலான உறவாக முதலாளித்துவம் மாற்றியமைப்பதாக தன்னுடைய அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை நூலில் குறிப்பிட்டிருப்பார் மார்க்ஸ். மூலதனம் நூலுக்கான முகப்புரை மட்டுமல்ல, சாரத்தின் ஒரு பகுதியும் கூட அது. முன்னர் படித்தபோது கடந்துபோக கடினமாகத்தான் இருந்தது. ஆனால் வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்ற சாரத்திலிருந்து நோக்கும் மார்க்சிய அணுகுமுறையை சொல்லளவில் ஏற்று உணர்வளவில் ஏற்க மறுக்கும் ரெண்டுங்கெட்டான் மனநிலைதான் இதையும் ஏற்க மறுக்கிறது என்பதை புரிந்துகொள்ளும் போது நமக்குள் இருக்கும் அறிவியலாளன் விழித்துக் கொள்கிறான். விழிக்க மறுக்கும் மனதிற்கும் விழித்துக் கொண்டிருக்கும் மனதிற்கும் இடையிலான போராட்டத்தில் வர்க்க வேறுபாடுகளுக்கிடையிலான விழுமியங்களுக்கிடையிலான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே முகிழ்ந்து எழுகிறது கமலின் தமிழ் பிக்பாஸ் சீஸன் 4.
அன்பு ஜெயிக்காதா என்று அடிவயிற்றிலிருந்து கேள்வி எழுப்புகிறார் அர்ச்சனா – லவ் பெட்டின் நிரந்தரத் தலைவி. ஆனால் அதில் இணைந்திருந்த ஏழுபேரும் அன்பினால் மட்டுமே தான் பிணைக்கப்பட்டிருந்தார்களா? அர்ச்சனாவும் புதுக்கோட்டை நிசாவும் ஆர் பி சவுத்ரியின் மகனான ஜித்தன் ரமேசின் ஆடைகளை அலசிப் போட்டதை வெறும் அன்பு என்றுதான் பார்க்க வேண்டுமா? அது ஆண்டைகளை நோக்கிய அடிமைகளின் கைகூப்பல்கள் இல்லையா? அடிமையின் விசுவாசத்திற்கு அன்பு என்றும் பெயர் சூட்டுகிறார் அர்ச்சனா.
அன்போ காதலோ அப்படித்தானே இருக்க முடியும் என்று எதிர்புறம் நின்று கேள்வி எழுப்பலாம். சாசுவதமாக அன்போ காதலோ இப்படியே நிலவும் என்றால் இயங்கும் பொருட்களைக் கவனிக்க மறுக்கும் நிலைமறுப்பின் மறுப்பல்லவா நமது சிந்தனை. அல்லது அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றுதான் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கப் போகிறோமா? அர்ச்சனாவின் லவ் பெட்டில் ஆரிக்கோ, ரம்யா பாண்டியனுக்கோ ஏன் இடமில்லாமல் போனது? பாலாஜிக்கும் அந்த ’சங்கப்’பலகை இடமளிக்க மறுத்த போதிலும் அனிதாவுக்காக அதன் பலகை விரிந்து கொடுத்ததாக சொல்ல முடியாது எனினும் அனிதாவை எப்படி மதிப்பிடுவது?
நிலவும் சமூகத்தில் பேசியே திண்ணையை தேய்க்கும் தலைமுறையின் வர்க்கத்தின் பிரதிநிதிதானே அனிதா. அர்ச்சனாவின் அன்பை அது கேள்விக்கிடமில்லாமல் ஏற்றுக்கொள்கிறதே, அது சந்தர்ப்பவாதம் இல்லையா என்ற கேள்வி 84 நாட்களில் 11 வாரம் ரசிகர்களின் மனதில் ஏன் தோன்றவில்லை என்பது தோள் சாய்க்க முகம் தேடிய அர்ச்சனாவைக் காட்டிலும், முகம் சாய்க்க தோள் தேடிய அனிதாவை விடவும் சந்தர்ப்பவாதம் மிகுதியானது இல்லையா.
அர்ச்சனா போல அன்பை எல்லோரிடத்திலும் கொட்டாமல் ஆதாயம் பார்த்துதான் கொட்டுகிறது நடுத்தர வர்க்கமான குட்டி முதலாளித்துவ வர்க்கமும், அதுவாக பாவனை செய்யும் தமிழகத்தின் உதிரி பாட்டாளி வர்க்கமும். தன்னால் தர இயலாத அன்பை, அல்லது போட்டி நிறைந்த உலகத்தின் எதார்த்தத்தை புரிந்து கொள்ளும் வர்க்கங்கள் வெளிக்காட்டும் ’ஆதாய – அன்பை’ சந்தர்ப்பவாதம் எனச் சொல்ல முடியாதா? அனிதாவை இடுப்பில் தூக்கிச் சுமக்கும் அர்ச்சனாவிடம் அதற்காக அன்பே இல்லை எனச் சொல்லி விட முடியுமா? அர்ச்சனாவின் அன்பை சம்பாதித்த போதிலும் தனது உடைகளை லவ் பெட் துவைத்துக் கொடுத்த காரணத்துக்காக விமர்சனம் எழுந்தபோது ’என் வீட்டில் வாசிங் மெசின் இருக்கிறது. நான் ஏன் துவைக்க வேண்டும் இங்கே’ எனச் சொல்லி எதிரிகளின் வாயை அடைத்துவிட்டதாக கருதிய ஜித்தன் ரமேஷ் அந்த அன்பினை ஒரு மிசினுக்கு ஒப்புக்கொடுத்து விடவில்லையா அதன் மூலம். மார்க்ஸ் இதைத்தான் குறிப்பிடுகிறாரோ?
அர்ச்சனாவின் அன்புக்கு ‘கட்டுப்பட்டிருக்கும்’ புதுக்கோட்டை நிசா தனது மலேசிய உரை பற்றிய கமலின் எதிர்பார்ப்பை பொறுத்தவரை ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக காத்துநிற்கும் தமிழருவி மணியனின் காட்சி பிரதிபலிப்புதானே. அல்லது ஏசி சந்திரபாபுவின்’..மேடையேறிப் பேசும்போது ஆறு போல பேச்சு – கீழ இறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சு” என்ற வரிகளுக்கான நடைமுறை விளக்கமா? அர்ச்சனாவின் தந்தையின் மறைவை கிளறிக் கிண்டிய நிசாவின் அன்பு தேவைகளுக்காக வளைத்துக் கொடுக்கப்படும் பூமராங்கா? ஆரியின் பாலாஜி குறித்த அடிமை-நட்புக்கோ ஷிவானியின் பாலாஜி குறித்த காதல்-நட்புக்கோ என்ன பொருள் விளக்கம் பிக்பாஸ் கமலிடம் மீதியாய் இருக்கிறது.
ஆனாலும் இத்தகையை அன்பை ரசிகர்கள் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் வெறுத்தொதுக்கி இருக்கிறார்கள். முன்னேறி விட்டார்களோ என்று கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. இந்த ரசிகர்களின் பெரும்பான்மையோர் நடுத்தர வர்க்க நபர்கள் அல்ல. கூலி விவசாயி துவங்கி நடுத்தர விவசாயி வரையிலானவர்களும், அன்றாடங்காய்ச்சிகள் துவங்கி உதிரிப் பாட்டாளிகள் வரையிலானவர்களும் பெரும்பான்மையினர் இதில். நிஜ வாழ்வில் அடிமைப் புத்தியையும் அடிமை அன்பையும் ஏற்றுக்கொள்பவர்கள் அல்லது சரியாகச் சொன்னால் நடைமுறைப்படுத்தும் இந்த ’அழியும்’ வர்க்கம் தன்னை நிலைநிறுத்துவதற்கான மாயக் கண்ணாடியாக அர்ச்சனாவின் நிரந்தர அன்பை பார்க்கிறது. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என்பதன் சமூக விளக்கம் தான் இது.
ஆனாலும் கள்ளத்தனமான இந்த வர்க்கம் பாலாஜியின் காதலியான ஷிவானியை ரசிக்காமலா இருக்கிறது. அதே வர்க்கங்கள் லவ் பெட்டின் சோம் சேகருக்கும் ரம்யாவுக்குமான காதலின் புரிதலை ஏற்காமல் தானே இருக்கிறது. ஒருவகையில் கவுரவக் கொலை வரை செல்வதற்கு வாய்ப்புள்ள அளவுக்கு இதனைப் பார்க்கிறது இந்த வர்க்கங்களது மனநிலை. ஆனால் நடைமுறையில் அப்படியெல்லாம் இல்லைதானே. இந்த போலித்தனம் எதற்கு?
கேள்விகள் நிரந்தரமானவை அல்ல. கேள்வி கேட்கவே செய்யாத சமூகம் கேட்டுப் பழகுவதற்கு வாய்ப்பளிக்க காலம்தோறும் மேசையாக்கள் தோன்ற முடியாது. எங்கெல்சின் மொழியில் சொல்வதென்றால் அற்பவாதாம் கோலோச்சும் மண்ணில், சமூகமே பெட்டிக்கடைக்காரன் மனநிலையில் இருக்கும்போது பிக்பாசோ கமலோ அல்லது இன்னபிற கன்டஸ்டென்டுகளோ இதிலிருந்து எப்படி தப்பிக்க முடியும் – பார்வையாளர்களுக்கும் இது பொருந்தும் தானே.
***
பாலாஜியின் புரிதலின்மையை, ஆண் என்ற தோரணையில் நடத்தும் முரட்டுத்தனத்தை ரசித்தபடியே அவனை தவறுகளோடு ஏற்கிறது தமிழக மனம் (வர்க்க மறுப்பாளர்களாக சோ கால்டு போராளிகளுக்கு – விவசாயிகளுக்குள் வர்க்கமில்லை என நம்புவோருக்கு – இதுவே போதும்). ஷிவானியின் அடிமைத்தனத்தை வரவேற்று வாக்களித்து ‘இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள’ பாடலின் நவீன வெர்சனை தன்னகரம் போட்டு இசைத்த படி இருக்கிறது தமிழகம். கேப்ரில்லியாவின் பாலா மீதான ஈர்ப்பும் அது தோற்றுவிக்கும் அரசியலையும் இன்னமும் தமிழக பார்வையாளர்கள் தவறாக இணைத்துப் புரிந்து கொள்ளவில்லை. ‘நோ ன்னா நோ தான்’ என்பதே புரியாத அளவுக்கு ஜோபி என்ன பச்ச புள்ளயா?
ஜோபி யின் காதலை வில்லத்தனமாக பார்க்க துவங்கிய ஆண்டுகள் இவை. பழைய எம்ஜிஆர் படமென்றால் ஜோபி தான் கதாநாயகி என்பது வேறு விசயம். அந்த சமூகமாக ரசிகர்கள் இருந்திருந்தால் நிச்சயமாய் ஷிவானி இன்னொரு பட்டிக்காடா பட்டணமா ஜெயலலிதா தான். அவளது தாய் திட்டியபோது தமிழகமே மகிழ்ந்திருக்கும். என்ன செய்வது ஷிவானி இருப்பது 21 ஆம் நூற்றாண்டின் 2கே கிட்ஸ்கள் மத்தியில் அல்லவா?
வெஷம் என்றுதான் ரம்யா பாண்டியனை சக பயணிகளும் ரசிகர்களும் அதன்வழியே சொல்கிறார்கள். பெண்ணொருத்தி டிப்ளமேட்டிக்காக இருப்பதை இன்னமும் பொறுத்துக் கொள்ளுமளவுக்கு தமிழ் சமூகம் வளரவில்லையா? இல்லை பாட்டாளி வர்க்கமே அந்தளவுக்கு தேர்ச்சி பெறவில்லையா? என்பதை கள ஆய்வுகள் தான் பின்னாட்களில் உறுதி செய்யும். ரம்யாவுக்கு இப்போது வெளியில் போய்விட்ட ஆஜீத் மீதிருக்கும் சகோதர நட்பை மதித்துக் கொண்டே ரம்யாவை விஷக்கொடுக்கு எனச் சொல்ல நாக்கு 180 டிகிரியாவது திரும்ப வேண்டாமா? ஆரிக்கும் ரம்யாவுக்கும் என்ன வித்தியாசம் அந்த நான்கு வயதினைத் தவிர.
**
ஆரிதான் கதாநாயகன் என்று பார்த்தால், அவனது குழந்தை ஆறு கோடி மக்களின் இதயத்தில் இடம்பெற்றுவிட்ட குழந்தையாக கமல் சொல்கிறார். ஒருவேள தேர்தல் நடத்தியிருப்பார் நம்மவர். இலங்கையின் விட்டகதை தொட்டகதையாக ஈழத்து பெண்ணான ஆரியின் மனைவி – எல்லா பிக்பாசும் ஈழத்தையும் வைத்து காசு பார்க்கின்றன – கமலஹாசன் ரூபத்தில்.
‘நீ நீயாவே இருக்க: சொந்தக் காரங்கல்லாம் அப்படித்தான் சொல்லி பாராட்டுறாங்க: நடிக்கல னு சொல்றாங்க’ இது அவரது மனைவி சொன்ன வார்த்தைகள். ரம்யாவின் தம்பி உள்ளிட்டு வந்த பல உறவினர்களும் ஆரியை மதித்துப் போற்றினார்கள். இதுதான் தமிழகத்தின் கள எதார்த்தமா? பொதுக்கருத்துக்கு எதிராக தன்னந்தனியாக போராடுவோரை எப்படி எதிர்கொள்கிறது தமிழகம்? அதெல்லாம் இருக்கட்டும், ஒருத்தன் அவனாகவே இருப்பது உலக சாதனையா என்ன? நடிக்காமல் இருப்பது சாதனை என்கிறது.
நாட்டுக்காக சிறை சென்றவர்கள், தூக்குக் கயிறை முத்தமிட்டவர்கள் எல்லாம் கடந்த காலம் என்கிறது தமிழகம். ஒரே கருத்தில் ஊன்றி நிற்பதை தியாகம் என்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் கமல். பார்வையாளர்களும் அப்படித்தான் கருதிவருகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே சிம் கார்டோ, மொபைல் போனோ, அல்லது நிறுவனமொன்றின் வேலையோ தொடருமானால் உங்களை பழைய பஞ்சாங்கங்கள் என்று சொல்கிறார்கள் அனைவரும் – கமல் உள்ளிட்டு.
ஆரி உண்மையில் ஜெயிக்கிறாரா? என்றால் உறுதியாக சொல்ல முடியாத நிலைதான். ஆனால் தான் தோற்கும் வாய்ப்புள்ள பகுதிகளில் தன்னை நல்லவனாக முன்னிறுத்திக் கொள்கிறார். முன்னிறுத்த வாய்ப்பளிக்காத வாழ்வினை பெற்றவர்களோ அதனைக் கொண்டாடுகிறார்கள். ஆரி கதாநாயகனாகிறார். தவறிழைக்க வாய்ப்புள்ள கத்தி மேல் நடையில் லாவகமாக நடக்கத் தெரிந்திருக்கும் ஆரியிடமிருந்து கற்பதற்கோ பொறாமைப்படுவதற்கோ பதில் பெட்டிக் கடை நடத்தும் மனநிலையில் உள்ள தமிழ்ச்சமூகம் இப்போது ஆரியை ஸ்பார்ட்டகசாக மாற்றுகிறது. லவ் பெட்டின் அடிமைத்தனத்தை எதிர்த்த்தன் மூலம் அவரும் ஒரு செங்கொடியை ஏந்தியிருக்கிறார். இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
விளையாடுவதைக் காட்டிலும் மற்றவர்களை குறைசொல்லியே மட்டும் விளையாடுவதாக ஆரியை நோக்கி கையை உயர்த்துகிறார் பாலாஜி. ஏறக்குறைய எல்லோருக்கும் இதே கருத்துதான். விமர்சனங்களை போராட்டங்கள் மீதும் வைக்கும் கம்யூனிஸ்டுகள் மீதான அதே அதே பார்வைதான் ஆரியின் விமர்சனத்துக்கும் முன்வைக்கப்படுகிறது. ஆரியின் விமர்சனத்தில் உள்ள அக்கறை புறக்கணிக்கப்படுகிறது – இப்போது நடக்கும் போலி விவசாய போராட்டம் நிஜ விவசாயிகளை ஏமாற்றுமே என்ற ஆதங்கம் பொதுவாக யாருக்கும் புரியவில்லையே அதைப் போல.
அன்பை உயர்த்திப் பிடித்த அர்ச்சனாவிடம் ல்வ் பெட்டின் உயிர்த்தோழி நிஷா வே பல் பிடித்துப் பார்த்தபோது யாரையோ நோக்கி அழுது தீர்த்த அர்ச்சனாவுக்கு அன்று யார் வில்லன்? அன்பு இல்லையா? அன்பென்ற மழையில் ஒளிந்து இருக்கும் குத்தீட்டிகளைக் கொண்டு நிஷா கிழித்தெறிந்தபோது அர்ச்சனா துவளவில்லையா? பூமாலையில் நாகப்பூ இருக்கையில் பாம்பும் வந்து உயிரை எடுக்கும் எனத் தெரிந்த பிறகு அதையே சூடுவது முட்டாள்தனமில்லையா?
நம்மில் பலரும் இவ்விரு நிகழ்வில் அர்ச்சனாவிடம் தானே இருக்க விரும்புகிறோம். ஆரியின் நேர்மை பிடித்தாலும் அவனுக்கு நண்பனாக இருக்க பார்வையாளன் தயாராக இல்லைதானே. இந்த நடுத்தர வர்க்க விமர்சனத்துக்கஞ்சும் போக்கானது சமூகத்தில் கோலோச்சுகையில் கூட பார்வையாளன் தன்னால் அர்ச்சனா போல்தான் சாத்தியம் என்று பெர்ன்ஷ்ட்டைன் வாதம் பேசுகையில் கூட ஆரியின் விமர்சனத்தை ரசிக்கிறானே அது என்ன வகையான ரசிப்பு?
கேள்விகள் மனிதர்களை ஆற்றுப்படுத்தக் கூடாது. ஆறேன ஓடுதற்குதவும் வாய்க்காலை, துன்பக்கேணியை தாண்ட உதவும் துடுப்பாக கேள்விகள் மிளிர வேண்டும். அதனை திட்டமிட்டு கேட்க முடியாது. சமூகத்தின் மீதான பற்றும் அதன் ஒரு துளியே நாம் என்ற அகந்தையற்ற மனமும் பொன்னுலகத்தை மண்ணுலகில் படைப்பதற்கான தாகமும் நிறைந்த மனிதர்கள் கேள்வி கேட்பதோடு தம்முன் விழும் கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளிக்கவும் முயல்கிறார்கள். மற்றவர்களோ சாத்தியமாவதை பேச சொல்கிறார்கள்.
சாத்தியம் தான் சரி என்று மனித நாகரிகம் கருதியிருந்தால் இன்னமும் நாம் காட்டுமிராண்டிகளாகத்தான் இருந்திருப்போம். உழைப்பை சாத்தியமாக்கி கைகளை வேலைக்கு பழக்கி தனது மூளையை வளர்த்து இப்படியாக சாத்தியத்தை மீறியதும் மனித எத்தனம். அதுதான் கட்சி கட்ட வைக்கிறது. புரட்சியை நோக்கியும் உந்தித் தள்ளுகிறது.
பகத் சிங்கையும் ஆரியையும் ஒப்பிடுவது அபத்தம் போல உங்களுக்கு தோன்றக் கூடும். உண்மையில் அராஜகவாதியான பகத் ஐ விட ஆரியின் கூர்மையான விமர்சனங்கள் சிறப்பானவை தான் என்ற முறையில் பகத் இரண்டாமிடத்திற்கு தள்ளப்படுவார். முதலிடம் ஆரிக்கு கைகாட்டியபடியே மவுன குருக்களாக இருக்கும் பார்வையாளர்களுக்கு. 2.0 ஆரி எனில் 2.1கே ரசிகர்கள்.
மற்றபடி மாவு பழய புளிச்ச மாவுதான்.