பீமா கொரேகான் – அம்பேத்கர் vs. கார்ல் மார்க்ஸ்

ambedkar
நேற்று சென்னை பெரியார் திடலில் பீமா கொரேகான் குறித்த ஆவணப்படம் ஒன்றை பார்க்க நேரிட்டது. நேரிட்டது தான். வேறு என்ன சொல்ல..

ஜிக்னேஷ் மேவானி போன்றோர் பீமா கொரேகான் 200 ஆவது ஆண்டை கொண்டாட 2010 ஜனவரி 1 ஐ தேர்வு செய்ய அன்று மராத்தாக்களுக்கும் மகர்களுக்கும் மோதல் வெடித்து கலவரமானது. அதாது சிவாஜி மகனை தகனம் செய்தது அல்லது புதைத்தது யார்? என்பதுதான் மோதலுக்கான மைய காரணம். அதன் பிறகு பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட 250 கட்சி சாரா அமைப்புகள் பந்த் க்கு அழைப்பு விடுத்தனர். இதெல்லாம் தெரிந்த கதை.

பெரியார் திடலில் திரையிட்ட பிறகு கலந்துரையாடல் என்ற பெயரில் அனைவருமே பீமா கொரேகானை புகழ்ந்து மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். காரணம் படம் ஒரு பொய்யை அடிப்படையாக வைத்துதான் நகர்ந்து கொண்டிருந்த்து.

1818 ல் பீமா கொரேகான் கிராமத்தில் கம்பெனி படைகளுக்கும் பேஷ்வாக்களுக்கும் நடந்த யுத்தத்தில் பேஷ்வா படை முறியடிக்கப்பட்டது. அதனை முறியடித்தவர்கள் கம்பெனியின் மகர் படையணியினர் என்பதால் அம்பேத்கர் உள்ளிட்டோர் அதனை பேஷ்வாக்களின் மீதான மகர்களின் வெற்றியாகவே பார்த்தனர். படமோ பேஷ்வாக்களின் தீண்டாமை காரணமாக அவர்களது படைகளில் சேர விடாமல் தடுக்கப்பட்ட மகர்களை தங்களது படையில் இணைத்துக் கொண்டனர் பிரிட்டிசார் என்கிறது. அம்பேத்கரும் இதனைத்தான் வழிமொழிந்தார். பிளாசிப் போரில் கம்பெனியின் படையில் சேர்க்கப்பட்ட தீண்டத்தகதோரான துஷ்ர சாதியினர் துவங்கி கடைசியில் மூன்றாவது மராத்தா போரின் இறுதிப் போரான பீமா கொரேகான் யுத்தத்தில் சேர்க்கப்பட்ட மகர்கள் வரை கம்பெனியின் ஆட்சியை இந்தியாவில் நிலைநிறுத்தியதே தலித்துகள் தான் என்று அம்பேத்கர் கூறினார். உண்மையில் அந்தப் படையில் மகர்கள் மாத்திரம் இருக்கவில்லை அல்லது பெரும்பான்மையாகவும் இல்லை.

படம் பொய்யை அடிப்படையாக கொண்டிருந்தாலும் சில சமயங்களில் அதற்கு மிக பக்கமான பாதி உண்மையையும் பேசுகிறது. மகர்களை தங்களது படையணியில் சேர்த்துக் கொண்ட பிரிட்டிசார் அந்த படையணியை ஒருமுறை கலைத்தனர் என்பதை படம் சொல்கிறது. ஆனால் இருமுறை கலைத்தனர் என்பதை விட மகர் போன்ற மார்சியல் ரேஸ் அல்லாத சாதிகளை போரின் போது மாத்திரம் படையணியாக – தற்காலிகமாக அமைத்தனர் என்பதையும் பார்க்க வேண்டும். அதாவது போர்க்காலத்தில் மாத்திரம் கூப்பிடுவது.

மகர் சாதி உள்ளிட்ட பல சாதிகள் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிகள் அனைத்துமே மார்சியல் ரேஸ் அல்லாத சாதிகள் தான். இந்தியாவை பொறுத்தவரை இந்த மார்சியல் ரேஸ் என்பதும் கூட மாறிக்கொண்டுதான் இருந்தது. சீக்கியர்கள், ரஜபுத்கள், கூர்க்காக்கள், நாயர்கள், மராத்தாக்கள், ஜாட்டுகள், குஜ்ஜார்கள் போன்ற சில சாதியினர்தான் மார்சியல் ரேஸ் என்றாலும் தளவாய் வேலுத்தம்பி தலைமையிலான எழுச்சிக்கு பின் நாயர்களை இதிலிருந்து பிரிட்டிசார் விலக்கியும் வைத்தனர்.

மகர் சாதியினர் மராத்தா படையில் சிவாஜி போன்றோர் மன்னராக இருந்த காலத்தில் இருந்தாலும், போர் என்பது கொரில்லா முறையில் இருந்து சமதள பிரதேசத்துக்கு மாறிய பின் நீக்கப்படவும் செய்தனர். இதற்கு தீண்டாமை காரணம் அல்ல. மாறாக போருக்கான சாதியாக அவர்கள் உடலமைப்பு வளமாக இல்லை என்பதுதான். இந்திய சாதிய சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெரும்பாலான சாதிகளின் நிலைமை இதுதான். மகர்களும் அதற்கு தப்பவில்லை. அம்பேத்கருக்கு இப்படி அடித்து விட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததையும் சேர்த்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

1818 ல் பீமா கொரேகான் போரில் அவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட காரணமே அப்போதைய போரே பிண்டாக்களுக்கு எதிரான கம்பெனியின் படை நகர்வுதான். உண்மையில் பேஷ்வாக்கள் போரை நேரடியாக நடத்தவில்லை. மாறாக பிண்டாக்கள் மற்றும் அராபிய கூலிப்படையினர் தான் அவர்களுக்காக நடத்தினர். இன்னும் சொல்லப்போனால் மராத்தா பாளையங்களின் வீழ்ச்சிக்கு பிறகு இந்த கொள்ளை வழிமுறை தங்களை கடைத்தேற்றும் என பேஷ்வா நம்பினார். கிடைத்த கொள்ளையில் திசை காவல் ஒருவருக்கும் குடிகாவல் ஒருவருக்கும் எனப் பிரித்துக்கொள்ள முடிவாயிற்று. அதற்கு பிண்டாக்களை அணுக காரணம் மராத்தாக்களுக்கும் மகர்களுக்கும் கோட்டையில் இருந்து சமவெளிக்கு வரும்போது முரண்பாடு ஏற்பட்டு விட்டிருந்தது.

பிண்டாக்கள் கொல்கத்தாவின் காசிம் பஜார் பகுதிகளில் நெசவுத் தொழிலை பாழ்படுத்தும் வேலையை செய்ய ஆரம்பிக்கவே அவர்கள் மீது வாரன் ஹேஸ்டிங்ஸ் கண் வைக்க வேண்டியதாயிற்று.

இரண்டாவது பீமாகொரேகான் போரில் பேஷ்வாக்கள் பக்கமும், கம்பெனி பக்கமும் மராத்தா போர் வீரர்கள் கணிசமாக இருந்தனர். கம்பெனி படையில் இறந்த 49 பேரில் 22 பேர் மகர் என்றால் 16 பேர் மராத்தாக்கள், 8 பேர் ரஜபுத்கள். எனில் இதனை எப்படி மகர்களின் வெற்றியாக பார்க்க முடியும். மகர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டதன் வெற்றியாக வேண்டுமானால் பார்க்க முடியும். அதுவும் முழுமையான உண்மையல்ல.

ஆனாலும் பிரிட்டிசாருக்கு பிண்டா போன்ற பழங்குடியினரை எதிர்கொள்ள கொரில்லா படை தேவைப்பட்டதால் மகர்களை படையணியில் எடுத்துக் கொண்டனரே தவிர அம்மக்கள் மீது பெரிய கருணையெல்லாம் கிடையாது. அதனால்தான் தேவைகள் முடிந்த இரு முறையும் பிரிட்டிசார் மகர் ரெஜிமெண்டை கலைத்தனர்.

1857 சிப்பாய் கலகத்தில் மகர்களின் இரண்டு பட்டாலியன்கள் பேஷ்வாக்களின் ஆட்சியை திரும்ப வருவிப்பதற்காக கலந்து கொண்டன. (மற்ற நான்கு பட்டாலியன்கள் பிரிட்டிசார் தரப்பில் போரிட்டன – இதற்கு அம்பேத்கரிடம் பதில் இல்லை) 1892 ல் மகர் ரெஜிமெண்டை பிரிட்டிசார் கலைத்தனர். அதற்கு அவர்கள் மார்சியல் ரேஸ் கிடையாது என வெளியில் சொன்னாலும், 1875 க்கு பின் இந்தியர்களை அரசு பதவியில் அமர்த்த துவங்கிய பின் தலித்துகளுக்கு என்ன நடக்கும் என்பதற்கு நல்ல சான்று இது. அன்று மகர்களை ஒதுக்க கூடாது என நின்றவர்களில் முக்கியமானவர் பேஷ்வாக்களின் சாதியான சித்பவன் பார்ப்பனர்களின் சாதியை சேர்ந்த கோபாலகிருஷ்ண கோகலே.

முதல் உலகப்போரில் பிரிட்டிசாருக்கு படையணியினர் தட்டுப்பாடு ஏற்படவே மகர்களை 1917 இல் போரின் நடுவே சேர்த்துக்கொண்டனர். அதாவது மார்சியல் ரேஸ் அல்லாத பல சாதிகளையும் சேர்த்துக்கொண்டனர். அவர்களுக்கு பெரும்பாலும் உள்நாட்டு அமைதி நிலைநாட்டுதல், ஸ்கவுட் படையணியாக செல்லுதல் போன்ற பணிகள்தான் ஒதுக்கப்பட்டன. சில பிரச்சினையான பகுதிகளில் போர்முனைக்கும் அனுப்பி வைத்தனர். போர் முடிந்த பின் 1921 ல் திரும்பவும் மகர் படையணியை பிரிட்டிசார் கலைத்து விட்டனர்.

மார்சியல் ரேஸ் இல் இருந்து மாத்திரம் எடுத்தால் ஆள் பற்றாக்குறை வருகிறது என்பது தான் காரணம். இதே காரணம் 1939 லும் ஏற்பட்டு மகர் ரெஜிமெண்ட் துவங்கி இப்போது வரை ஓடிக் கொண்டிருக்கிறது. இது மகர்களுக்கு மாத்திரமான பிரச்சினையல்ல. இப்போது ஆதிக்க சாதியில் இருந்தாலும் பல சாதிகள் மார்சியல் ரேஸ் இல்லை என்பதால் இதே பிரச்சினையை எதிர்கொண்டுதான் இருந்தனர்.

மெட்ராஸ் ரெஜிமெண்ட் அல்லது மகர் ரெஜிமெண்ட் தான் சுதந்திர இந்தியாவில் இந்த சாதிகள் அனைத்தையும் சேர்த்துக்கொண்ட பிரிவு. அதாவது மார்சியல் ரேஸ் அல்லாத சாதிகளை.

இரண்டாம் உலகப் போரில் கூட மகர்களை பிரச்சினை மிக்க பர்மா பகுதிக்கும் ஆப்கன் பகுதிக்கும் தான் அனுப்பி வைத்தனர். பிரிவினைக்காலத்தில் அமைதி காப்பு வேலையில் ஈடுபடுத்தப்பட்ட இவர்கள் சுதந்திர இந்தியாவிலும் இதே போன்ற வேலையில்தான் இருக்கின்றனர். உதாரணம் இலங்கைக்கு அனுப்பபட்ட இந்திய அமைதிப்படை இந்த ரெஜிமெண்ட் தான்.

1927 ஜன 1 ல் அம்பேத்கர் பீமா கொரேகான் வருகிறார். ஏற்கெனவே இருமுறை கலைக்கப்பட்ட மகர் படையணியினர் சிலரும் வருகிறார்கள் அவருடன். அம்பேத்கரை பொறுத்தவரை தலித் மக்கள் அரசுப் பணியில் ராணுவத்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற நோக்கம் தான் உள்ளக்கிடக்கையாக இருந்திருக்க முடியும். ஆனால் தீண்டாமை காரணமாக ராணுவத்தில் பணிபுரிய வாய்ப்பு மறுப்பு என்றும், தலித் அடையாளம் என்றும் பீமா கொரேகான் முன்னிறுத்தப்படுவதுதான் முரண்நகை.

பீமா கொரேகான் போரில் பேஷ்வாக்களை தோற்கடித்த மகர் படையணியை அம்பேத்கர் போற்றுகிறார். 1857 இல் பேஷ்வாக்களது போராட்டத்தை காரல் மார்க்ஸ் வரவேற்று பல கட்டுரைகளை வரைகிறார். தனிப்புத்தகமாகவே வந்துள்ளது. ஆனாலும் அந்தப் போரின் சுதேசிப் படைப்பிரிவில் பார்ப்பனர்கள் துவங்கி தலித்துகள் வரை கலந்தே இருந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் மார்க்ஸ். அம்பேத்கர் மார்க்சோடு முரண்படும் எளிய புள்ளியில் இதுவும் ஒன்று. சமூக விடுதலையா அரசியல் விடுதலையா என்ற அதே பழைய பல்லவிதான்.

பீமா கொரேகான் நிகழ்விலும் அதுதான் நடைபெற்றது. இருபுறமும் அராபியர்கள், மராத்தாக்கள் போன்ற சாதியினர் விரவித்தான் இருந்தனர். ஒரு சாதியின் வெற்றி என பீமா கொரேகானை தூக்கி நிறுத்தி இருப்பதும் ஆண்ட பரம்பரை பெருமையும் வேறு வேறு அல்ல.

மௌரிய பேரரசே தலித் பவுத்த அரசு என்றும் அதனை பார்ப்பனர்கள் அழித்தொழித்தார்கள் என்றும் நம்பும் தலித் அமைப்புகள் வட இந்தியாவில் பிரசித்தம் பெற்றவை. பீமா கொரேகானில் மஞ்சள் உடையுடன் நடனம் ஆடும் ஆண்ட பரம்பரை பெருமைகள் உலவுகின்றன. மராட்டிய குஜராத் பகுதியின் ரஜபுத்திரியமயமாதலில் பீமா கொரேகான் மகர் சாதியின் மஞ்சள் தலைப்பாகை என்பதற்கு மேல் ஒன்றுமில்லை.

கடைசியில் அடையாள அரசியலால் விளையப்போவது ஏதுமில்லை எனபதை தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்துகொள்வதற்குள் ஏகப்பட்ட ஜிக்னேஷ் மேவானிக்கள் தோன்றி விடுவார்கள். பிரச்சினை எள்ளளவும் தீராது.

பி.கு – திப்புவுக்கு எதிரான போர்களில் மராத்தா படைகள் ஆங்கிலேயர் பக்கம் நின்றதாக சொல்கிறார் ஆவணப்படத்தில் வரும் வரலாற்றாசிரியர். கொஞ்சம் வரலாற்றை படித்து விட்டு உளறுவது நல்லது. மராத்தாக்கள் எந்தக் காலத்திலும் பிரிட்டிசாருடன் இணைந்து போரிடவில்லை. மூன்றாவது மைசூர் போரில் திப்புவுடன் தனியாக போர் நடத்தினார்கள். அதற்கான காரணங்களும் வேறு. மைசூர் கெசட்டியாரில் அது விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது..

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.